தென்காசி கோர விபத்து: ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு; தனியார் பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது

0 22

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த விபத்து குறித்து சம்பந்சப்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தென்காசி மாவட்டம் இடைகால் அருகே துரைச்சாமிபுரம் கிராமத்தில் இருந்து தென்காசியிலிருந்து ராஜபாளையம் சென்றுக்கொண்டிருந்த கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்தும், எதிரே கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்துக் கொண்டிருந்த எம்.ஆர்.கோபாலன் என்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

 

இந்த கோர விபத்தில் இதுவரை 6 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

புளியங்குடியை சேர்ந்த வனராஜ்(36), மல்லிகா(55) கடையநல்லூரை சேர்ந்த தேன்மொழி(55), சங்கரன்கோயிலை சேர்ந்த கற்பகவல்லி(50) புளியங்குடியை சேர்ந்த சண்முகத்தாய் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர் என்பதும், மேலும் 2 பேரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு

 

இதனிடையே, விபத்தில் சிக்கிய இரண்டு பேருந்துகளின் ஓட்டுனர்களான நெற்கட்டும் செவல் பகுதியை சேர்ந்த முத்து செல்வன் (36), ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வம்(38) ஆகியோர் மீது இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மற்றவர்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்படுதல், அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்படுவது, கவனக்குறைவாக செயல்படுத்தல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பேருந்தின் உரிமம் ரத்து

 

இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு சென்ற தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மீட்புப்பணிகளை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, தென்காசி மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

 

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், “விபத்திற்கு காரணமான கேஎஸ்ஆர் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்துள்ளோம். மேலும், தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக வேகக்கட்டுப்பாடு அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்” என தெரிவித்தார்.

 

மேல்சிகிச்சை

 

இந்நிலையில், தென்காசி மருத்துவமனையில் இருந்து 10 பேர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 6 பேர் உயிரிழந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 4 பேர் அபாய கட்டத்தில் உள்ளதாகவும், அவரது உடல்நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.