திருச்சி: குண்டும் குழியுமான சாலையைச் சீரமைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்; வணிகர்கள்,பொதுமக்களின் பாராட்டு மழையில்!
திருச்சி, ஜூன் “காவல்துறை உங்கள் நண்பன்” என்ற சொல்லுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் விதமாக, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் தமிழரசன்மேற்கொண்ட சமூக அக்கறை கொண்ட செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
பழைய பால் பண்ணை நால்ரோடு சிக்னல் பெட்ரோல் பங்க் பகுதியில் நீண்ட நாட்களாக மிக ஆழமான பள்ளம் ஒன்று இருந்து வந்தது. இப்பகுதியில் டாஸ்மாக் பார் அமைந்துள்ளதால், போதையில் வரும் வாகன ஓட்டிகள் இப்பள்ளத்தில் சிக்கி தினந்தோறும் இரவு நேரங்களில் விபத்துகளில் சிக்கி வந்தனர். இதனால் அப்பகுதி பெரும் ஆபத்தான இடமாக உருவெடுத்திருந்தது.
சொந்த முயற்சியில் சீரமைப்பு:
பெரும் விபத்துகள் நிகழும் முன்னரே அதனைத் தடுக்க வேண்டும் என்ற சமூக உணர்வுடன், பாலக்கரை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் (SI) தமிழரசன் களத்தில் இறங்கினார். தனது சொந்த முயற்சியில் அந்தப் பள்ளத்தைச் ஜல்லி சிமின்ட் கலவை கொண்டு சரி செய்த அவர், சாலை போக்குவரத்திற்கு இடையூறு இன்றி அப்பகுதியைப் பாதுகாப்பாக பேரிகார்டுகள் கொண்டு சீரமைத்தார்.
வாகன ஓட்டிகளின் நலன் கருதி அவர் மேற்கொண்ட இந்தச் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி:
மேலும், இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் பொறுப்பேற்ற நாள் முதலே, அப்பகுதியில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த கடும் போக்குவரத்து நெரிசலைத் தனது சிறப்பான திட்டமிடல் மூலம் வெகுவாகக் குறைத்துள்ளார். காவல்துறையின் கடமையைத்தாண்டி, பொதுமக்களின் நண்பனாகச் செயல்பட்டு வரும் உதவி ஆய்வாளர் தமிழரசனுக்கும், அவருடன் இணைந்து பணியாற்றிய சக போக்குவரத்து காவலர்களுக்கும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
உதவி ஆய்வாளர் தமிழரசனின் இந்தச் சமூக அக்கறை கொண்ட பணியைப் பாராட்டி, பின்வரும் அமைப்புகள் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளன:
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன்
அரசியல் வாமனன் தமிழ் மாத இதழ்
ஆசிரியர் பி. ராஜேஷ்குமார்