Credit Score Update In Every Seven Days | தற்போதைய நிலவரப்படி மாதத்திற்கு இரண்டு முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 7 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்ய ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.
இந்தியாவை பொருத்தவரை வங்கிகளில் கடன் வாங்க வேண்டும் என்றால் கிரெடிட் ஸ்கோர் (Credit Score) மிக முக்கிய அம்சமாக உள்ளது. கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் அதிக வட்டியுடன் கூடிய கடன், கடம் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது, குறைந்த கடன் தொகை என பல்வேறு சிக்கல்களை பொதுமக்கள் சந்திக்கின்றனர். இந்த நிலையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, 7 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோரை அப்டேட் செய்ய ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. இந்த ரிசர்வ் வங்கியின் இந்த முக்கிய முடிவு குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு7 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட் – ஆர்பிஐ அதிரடி
தற்போதைய நிலவரப்படி ஒரு மாதத்திற்கு இரண்டு முறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தான் ஆர்பிஐ 7 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. கிரெடிட் ஸ்கோர் தரவுகள் எப்போதும் அப்டேட்டாக இருக்கும் வகையில் இந்த முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதாவது ஒவ்வொரு மாதமும் 7, 14, 21, 28 மற்றும் மாதத்தின் கடைசி நாள் என கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்ய ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.
கடன் பெறும் பொதுமக்களுக்கு இது எந்த அளவு பயனுள்ளதாக இருக்கும்?
மாதத்திற்கு இரண்டு முறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்படும் நடைமுறையால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொள்கின்றனர். அவற்றை சரிசெய்ய இந்திய ரிசர்வ் வங்கி இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது.
உடனடி கிரெடிட் ஸ்கோர் அப்டேட்
ஒருவர் தனது லோன் அல்லது கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்கிறார் என்றால் அவரது கிரெடிட் ஸ்கோர் அப்டேட் ஆவதற்கு சில நாட்கள் எடுத்துக்கொள்ளும். இதன் காரணமாக அந்த நபர் தனக்கு மேலும் பண தேவை இருக்கும்போது வங்கியில் கடன் பெற கிரெடிட் ஸ்கோர் அப்டேட்டுக்காக காத்திருக்க வேண்டும். அதனை இந்த முறை எளிதாக்கும்.
விரைவு கடன்
கடனை முழுமையாக அடைத்தாலும் கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ள நபர்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க தயங்கும். இந்த நிலையில், இந்த அம்சத்தின் மூலம் கிரெடிட் ஸ்கோர் அப்டேட்டுக்காக காத்திருக்காமல் விரைவாக கடன் பெற முடியும்.
குறைந்த வட்டியில் கடன்கள்
கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ள நபர்களுக்கு வங்கிகள் அதிக வட்டியில் கடன் வழங்கும். தங்களுக்கு உடனடி பண தேவை இருக்கும் பட்சத்தில் பலரும் அதனை ஏற்றுக்கொண்டு கடன் பெறுவர். இந்த நிலையில், இந்த புதிய அம்சத்தின் மூலம் இனி குறைவான வட்டியில் கடன் பெற முடியும்.